PUBLISHED ON : மார் 15, 2024 12:00 AM

'அவசியம் சொல்லணுமா?'
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை, பாடியில் நடந்த மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பங்கேற்றனர்.சேகர்பாபு பேசுகையில், 'அமைச்சர் பன்னீர்செல்வம் ரோஜாப்பூ நிறம் கொண்டவர். பட்ட மரமாக இருந்தாலும் அவர் கை பட்டால் துளிர்விடும். காய்க்காத மரமும் காய்க்கும். கரிசல் நிலத்தை விளைநிலமாக்கும் ஆற்றல் கொண்டவர்' என புகழ்ந்தார்.
தொடர்ந்து பன்னீர்செல்வம் பேசுகையில், 'வாயால் வடை சுடும் கம்பெனிக்கு, கோவிலை பற்றி எதுவும் தெரியாது. அதையெல்லாம், இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அமைச்சர் சேகர்பாபு தவிடு பொடியாக்கி விடுகிறார். அவருக்கு, கோவில்கள்
பற்றிய அனைத்து தகவல்களும் தெரியும்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'படிப்புக்கும், நிர்வாக திறமைக்கும் சம்பந்தமில்லை தான்... ஆனாலும், சேகர்பாபு இரண்டாம் வகுப்பு தான் படித்தார்னு
அவசியம் சொல்லணுமா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

