PUBLISHED ON : செப் 19, 2026 01:12 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், சமீபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்; பின்னர் நிருபர்களை சந்தித்தவர், ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.
தமிழகத்தில் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகளை நெடுஞ்சாலைகளில் கொட்டுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம், இதற்கு முன்பிருந்த அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்காததே. ஆட்சியாளர்களின் நோக்கம் வேறு மாதிரி இருந்ததால், அதை கண்டுகொள்ளவில்லை. இனி அப்படி நடக்காது' என்றார்.
'மதுரை அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியென்றால், பழைய சிறை வளாகத்தை அரசு மருத்துவமனைக்கு ஒதுக்க முடியுமா?' என்று மற்றொரு நிருபர் கேட்க, 'வாய்ப்பிருந்தால் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவு செய்வோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'பிடி கொடுக்காமலே பேசுறாரே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
