PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில், 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், சோராஞ்சேரி ஊராட்சியில், 50 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, அகரமேல் பகுதியில் நடந்தது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் நாசர் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், 'மருத்துவமனை அமைக்க, இந்த இடத்தை, தானே தேர்வு செய்து கொடுத்ததாக, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கூறினார். பொதுவாக, குடியிருப்புகள் வந்தவுடன் சாலை, மின்விளக்கு, மழைநீர் கால்வாய் வசதிகள் வந்த பிறகுதான் மருத்துவமனை கேட்பர். ஆனால், இங்கு முதலில் மருத்துவமனை வந்து விட்டது. இதன்பிறகு தான் வீடுகள் வரப் போகின்றன' என்றார்.
இதைக் கேட்ட ஒருவர், 'அது சரி... அரசு மருத்துவமனை இருக்குன்னு சொல்லியே, இங்க வீட்டு மனைகள் விலையை ஏத்திடுவாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

