PUBLISHED ON : அக் 11, 2026 12:00 AM

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடியில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தி.மு.க., சீனியர் தலைவர் துரைமுருகன் பல அறிவுரைகளை கூறியுள்ளார். அதை, ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை என முதல்வர் விஜய் பேசியுள்ளார். நான் சொன்னதை, விஜய் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
‘எங்கள் கட்சியின் முப்பெரும் விழாவில், நம் கட்சி சாதாரணமானவர்களால் துவங்கப்பட்ட கட்சி. இந்த கட்சி தான், வலிமை உள்ளவர்களை எதிர்த்திருக்கிறது . ராமநாதபுரம் ராஜாவை, ஒரு சைக்கிள் கடை வைத்த தங்கப்பன் தோற்கடித்தார். சிவகங்கை மகாராஜாவை, சின்ன கடை வைத்திருந்த செட்டியார் தோற்கடித்தார்.
‘இந்த கட்சி, சாமானியர்களால் இயங்குகிறது என்று தான் சொன்னேன். நாம் எல்லாரும் மாறி விட்டோம்; பணம் இருக்கிறவர்களுக்கு தான் சீட் கொடுத்தோம் என நான் கூறவில்லை’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவர் என்ன தான் சொன்னாலும், தி.மு.க.,வில் இன்று கோடி கோடியா பணம் இருக்கிறவங்களுக்கு தானே சீட் தர்றாங்க’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
