PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‘தங்கைக்கு குழந்தை பிறந்ததும், தங்கையின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர் தான் தாய்மாமன். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, அந்த புனிதமான தாய்மாமன் உறவை தன் மீது ஏற்றுக் கொண்டதால், முதல்வர் விஜய், தன் சகோதரிகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.
‘முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழின் தொட்டில் மதுரை. அன்னை மீனாட்சி கருணையோடு அருள்பாலிக்கும் மண் மதுரை மண். வீரத்திற்கும், பாசத்திற்கும் பெயர் பெற்ற மண், இந்த மதுரை மண். தங்கைக்காக சீர் சுமந்து வரும் பாச மண், இந்த மதுரை மண்’ என, ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.
இதை கேட்ட உள்ளூர்காரர் ஒருவர், ‘சினிமாக்களில், மதுரைன்னாலே அரிவாள் கலாசாரம்னு காட்டுறாங்க... அதுக்கு அமைச்சர் பேச்சு ஆறுதலா இருக்கு’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
