PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சமீபத்தில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், 'தி.மு.க., ஒரு மாதிரியான கட்சி. இந்த கட்சிக்கு துரோகம் செய்தவனுக்கு கை, கால் இல்லாமல் போய்விடும்; பேச வராது; பைத்தியமாக திரிவான். ராஜாஜி முதல்வராக இருந்தபோது, 'தி.மு.க.,வை மூட்டை பூச்சி போல நசுக்குவேன்' என்றார். ஆனால், அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது, தி.மு.க., தான்.
'தி.மு.க.,காரன் கை விரலை வெட்ட வேண்டும்' என, காமராஜர் பேசினார். அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது, தி.மு.க., தான். காமராஜரால் அழிக்க முடியாத தி.மு.க.,வை, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான த.வெ.க.,வினர் தொட்டு பார்க்க முடியுமா?' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'பகுத்தறிவு பேசும் கட்சியில் இருந்துட்டு, முனிவர் போல சாபம் விடுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
