PUBLISHED ON : ஜூலை 30, 2026 12:00 AM

சென்னை, வேளச்சேரி வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம், வேளச்சேரி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்று, 'வேளச்சேரி - தரமணி சாலையில், 2014ம் ஆண்டு, 65 கோடி ரூபாயில் கட்டிய மழைநீர் கால்வாயில் வெள்ளம் செல்லவில்லை. இதை சீரமைக்கும்படி, 10 ஆண்டுகளாக கூறுகிறோம். ஒவ்வொரு முறையும், 'எங்களுக்கு சம்பந்தம் இல்லை' என, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கைகாட்டி தப்பிக்கின்றனர்' என புகார் கூறினர்.
அதற்கு அமைச்சர் குமார், 'நான் பார்த்துக் கொள்கிறேன். பருவமழைக்கு முன் கால்வாய் சரி செய்யப்படும்' என்றார்.
இதைக் கேட்ட சங்க நிர்வாகி ஒருவர், 'பத்து வருஷ பிரச்னையை இவர் தீர்த்துட்டா, அடுத்த 10 வருஷங்களுக்கும் இவர் தான் வேளச்சேரி எம்.எல்.ஏ.,வா இருப்பார்' எனக் கூற, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.
