PUBLISHED ON : அக் 23, 2026 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, 20-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் அங்கு வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.
‘எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் இருந்து வருகிறோம்; பேரணி இருப்பதாக கூறி ஆசிரியர்கள் அனுப்பினர்’ என்றனர். ‘என்ன பேரணி’ என போலீசார் கேட்க, ‘தெரியவில்லை... பேரணின்னு சொன்னாங்க... வந்துட்டோம்’ என்றனர்.
அடுத்த அரை மணி நேரத்தில், தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. இதில், மாணவியர் பங்கேற்றனர்.
இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், ‘தகவல் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தான் பேரணியே நடத்துறாங்க. ஆனா, பேரணியில் கலந்துக்க வந்த மாணவியருக்கே எதுக்காக பேரணின்னு தெரியலை... இவங்க என்னத்தை விழிப்புணர்வு ஏற்படுத்திடுவாங்க’ என முணுமுணுக்க, சக போலீசார் ஆமோதித்தனர்.
