/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'தி.மு.க.,விடம் கத்துக்கணும் பா!'
/
'தி.மு.க.,விடம் கத்துக்கணும் பா!'
PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலரும், பொள்ளாச்சி தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜெயராமன் பேசும்போது, 'புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்து கொள்ளுங்கள் என்று கூறுவது போல, 'கூட்டணி பலத்தால் வென்றோம்' என்று தான் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். 'தி.மு.க., தனி பலத்தால் வென்றது' என, ஸ்டாலின் உட்பட அக்கட்சித் தலைவர்கள் எப்போதும் கூறுவதில்லை.
'அவரது கட்சி பலம் என்னவென்று அவருக்கே நன்றாக தெரியும். அதற்காகத்தான், 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறார்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'கூட்டணியை சிந்தாம, சிதறாம கொண்டு போறது எப்படிங்கிற கலையை, தி.மு.க.,விடம் நம்ம, அ.தி.மு.க., தலைமையும் கத்துக்கணும் பா...' என, முணுமுணுத்த படியே கிளம்பினார்.