PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு,சென்னை கொளத்துாரில், 'மக்களின் பெருந்துணையானவர், வரலாற்றின் திருப்புமுனையானவர்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதில், உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராகபங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தி.மு.க., தனக்கு எதிராக வரும் வார்த்தையை கொண்டே திருப்பி அடிக்கும் பெருமை கொண்ட இயக்கம். கருணாநிதியை போல நக்கல், நையாண்டி அதிகம் கொண்டவர் துணை முதல்வர். வட மாநிலத்தில் ஒருவர், உதயநிதி தலையை சீவினால்,10 லட்சம் ரூபாய் பரிசு என்றார். அதற்கு உதயநிதி, கருணாநிதி பாணியில், 'என் தலையை சீவ 10 லட்சம் தேவையில்லை; 10 ரூபாய் சீப்பு போதும்' என்றார். அந்த அளவிற்கு கருணாநிதியின் ஞானம் அவருக்கு உள்ளது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அதனால் தான் உதயநிதியை மூன்றாம் கலைஞர்னு சொல்றாங்களா...?' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'கருணாநிதி வசனங்களை காப்பி அடிக்கிறதை கூட இவங்க பெருமையா பேசுறாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.