PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று பேசுகையில், 'திருவள்ளூர் மாவட்ட அமைச்சராக நான் இருந்தாலும், கிராம சபை கூட்டத்தை, என் ஆவடி தொகுதியில் நடத்தி இருந்தால், அங்கு சில பணிகள் நடந்து இருக்கும்.
'இங்கு சபை நடப்பதை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது. திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநரிடம், என் தொகுதியில் ஆறு வளர்ச்சி பணிகளை செய்து தருமாறு கேட்டிருந்தேன். அதில், மூன்று பணிகளை எனக்கு கொடுக்காமல் பூந்தமல்லி தொகுதிக்கு கொடுத்து, திட்ட இயக்குநர் எனக்கு ஆப்பு வைத்து விட்டார்...' என்றார்.
இதை கேட்ட கட்சி தொண்டர் ஒருவர், 'அமைச்சருக்கே அல்வா தந்துட்டாங்களா...?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

