PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகம். இவற்றை விரட்ட எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலனில்லை.
சமீபத்தில், காலையில் ஊழியர்கள் அலுவலகத்தை திறந்தபோது, உள்ளே இருந்து இரண்டு குரங்குகள் கத்தியபடியே பாய்ந்து வெளியே ஓடின. அதன்பின் தான், குரங்குகள் இரவு முழுதும் உள்ளே சிக்கியிருந்தது தெரியவந்தது.
அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் அதிர்ந்து போயினர். காரணம், அங்கிருந்த பைல்களை எல்லாம் குரங்குகள் கிழித்து எறிந்து நாசமாக்கியிருந்தன. பசிக்கு எதுவும் கிடைக்காமல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பேனாக்களை கடித்து குதறி வைத்திருந்தன. பாத்ரூமில் குழாயை திறந்து விட்டிருந்ததில், தெப்பம் போல தண்ணீர் தேங்கியிருந்தது.
இதை சுத்தம் செய்வதற்குள் ஊழியர்கள் திண்டாடி விட்டனர். ஊழியர் ஒருவர், 'குரங்கு சேட்டைன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம்... இப்ப தான் நேர்ல பார்க்கிறோம்...' என புலம்ப, சக ஊழியர்கள் ஆமோதித்தனர்.

