PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

விருதுநகர் மாவட்டம், சாத்துார் சட்டசபை தொகுதி, தி.மு.க., நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது.
அவர் பேசும்போது, 'ஒவ்வொரு நிர்வாகியும், 50 முதல் 60 வாக்காளர்களை கையில் வைத்திருக்க வேண்டும். தினமும் மக்களை சந்தித்து, மக்களோடு மக்களாக பழகுங்கள். மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேளுங்கள். அதை செய்ய முடியுமோ, இல்லையோ... காது கொடுத்து கேட்டாலே மக்களுக்கு பாதி நிம்மதி வந்து விடும்.
'அவற்றை செய்ய முடிந்தால் செய்து கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால், தொகுதி எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர், மாவட்டச் செயலரிடம் பிரச்னையை எடுத்து சொல்லுங்கள்...' என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் எல்லாம், நம்ம கோரிக்கையையே காது கொடுத்து கேட்கிறது இல்ல... இதுல, மக்களை எங்கே கண்டுக்க போறாங்க...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.