PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. இதில் காமராஜ் என்ற விவசாயி, 'செக்காரக்குடி கிராமத்தில், வேளாண் பொருட்கள் சேமிப்பு கூடம் அமைக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், 'சேமிப்பு கூடம் அமைக்க வாய்ப்பு இருக்கிறதா?' என, கலெக்டர் கேள்வி எழுப்பினார். அந்த அதிகாரி, 'மாவட்டத்தில்கூடுதல் சேமிப்பு கூடங்கள் அமைக்க கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
உடனே, 'செக்காரக்குடியில் இந்த ஆண்டு சேமிப்பு கூடம் அமைக்க வாய்ப்பு உள்ளதா அல்லது அடுத்த ஆண்டு வாய்ப்பு உள்ளதா என தெளிவாக கூறுங்கள்' என, கலெக்டர் மறுபடியும் கேட்க, அந்த அதிகாரி, முன்னர் கூறிய அதே பதிலை கூறினார்.
டென்ஷன் ஆன கலெக்டர், அதிகாரியை பார்த்து, 'நீங்கள் உட்காருங்கள்' எனக் கூறி, அடுத்த விஷயத்திற்கு சென்றார். விவசாயி ஒருவர், 'கரகாட்டக்காரன் படத்துல வர்ற வாழைப்பழ காமெடி கதையா இருக்கே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

