PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பை, ‘பேட்மின்டன்’ போட்டிகள், சமீபத்தில் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி அரங்கில் நடந்தன. இவற்றில் பங்கேற்ற கலெக்டர் பவன் குமார், விளையாட்டு வீரர்கள் போல, ‘ஜெர்சி’ எனும், ‘டி – ஷர்ட்’ அணிந்து வந்தார்.
போட்டியில் கலந்து கொள்ளும் முன், ‘வார்ம் அப்’ செய்தவர், அங்கிருந்த ஊழியர்களுடன் சிரித்து பேசியபடி மைதானத்தை சுற்றிப் பார்த்தார்; பின், முதல் போட்டியில் தன்னுடன் விளையாடிய ஊழியருடன் சகஜமாக பேசினார்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றவுடன் அடுத்த போட்டியில் விளையாட, அங்கேயே ஒரு சேர் போட்டு உட்கார்ந்து, விளையாட வந்த ஊழியர்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த ஊழியர் ஒருவர், ‘சில அதிகாரிகள் விளையாட வந்தாலும் அதிகாரி தோரணையிலயே நடந்துக்கிடுவாங்க... ஆனா, இவர் நம்மை போல விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே...’ என முணுமுணுக்க, சக ஊழியர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
