PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடக்கும்.
இதில், சில விவசாயிகள் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை, பொதுவான விஷயங்களை பேசுவதால், காலை 10:30க்கு துவங்கும் கூட்டம், மதியம் 2:00 மணிக்கு கூட முடிவதில்லை; இதனால், அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதையடுத்து, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், 'ஒருவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும்' என நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நேரம் முடிந்ததும் ஊழியர் ஒருவர், 'ட்ரிங்... ட்ரிங்...' என, பெல் சத்தம் எழுப்பினார்; உடனே, அடுத்த விவசாயியை கலெக்டர் பேச அழைக்கிறார்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'சட்டசபையிலும் இப்படித்தான் பெல் அடித்து, 'பேச்சை முடிங்க' என, சபாநாயகர் உத்தரவிடுவார்... அந்த மாதிரி, விவசாயிகள் கூட்டத்தையும் மினி சட்டசபையா கலெக்டர்மாத்திட்டாரே...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

