PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

தஞ்சை மாவட்டம், விளார் பஞ்., முன்னாள் தலைவர் சோம ரத்தினசுந்தரம் தலைமையில், விளார் பஞ்சாயத்தில் உள்ள அ.தி.மு.க., கிளைச் செயலர்கள், 11 பேர் மற்றும் நிர்வாகிகள், 50 பேர், ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
பின், வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், 'பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்று சேர்ந்தால் மட்டுமே, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால், பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க., செப்டம்பர் இறுதிக்குள் ஒன்றுபட்டு, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஒரு படத்துல நடிகை சரண்யா, தன் மகனை ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான்னு அடிக்கடி காமெடி பண்ணுவாங்க... அந்த மாதிரிதான் இருக்கு இவர் சொல்றதும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.