PUBLISHED ON : ஆக 04, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், ஓமலுாரில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் குடும்ப விழா நடந்தது.
இதில் பங்கேற்ற, கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், 'பா.ஜ., தலைவர்கள், கூட்டணி ஆட்சி தான் என பேசிய போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அமைதி காத்தார். தற்போது, தனித்து ஆட்சி அமைப்போம் என பிரசாரம் செய்கிறார். பா.ஜ.,வை உள்ளே வைத்துக்கொண்டு ஆட்சி செய்ய முடியாது என, பழனிசாமிக்கு தெரியும்.
'என்னை பொறுத்தவரை, அ.தி.மு.க., பலமாக இல்லை என, பா.ஜ., நினைக்கிறது. எனவே, அ.தி.மு.க.,வை பழனிசாமி வலிமைப்படுத்த வேண்டும். பிரிந்து சென்ற பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், நிபந்தனையின்றி சேர்கிறோம் என்கின்றனர். அவர்களை மன்னித்து சேர்த்துக் கொள்வது தான் தலைமை பண்பு...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களை உள்ளே சேர்த்தால், பழனிசாமி வெளியே போக வேண்டியது தான்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.