PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

'ஞாபக மறதியால் அவதிப்படுகிறார் என நினைத்தால், இப்படி எல்லார் முன்னிலையிலும் என் மானத்தை கப்பலேற்றி விட்டாரே...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரைப் பற்றி, அவரது கட்சியைச் சேர்ந்த, மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் புலம்புகிறார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடிக்கடி கூட்டணி மாறுபவர் என்ற பெயர் நிதிஷ் குமாருக்கு உண்டு.
இந்நிலையில், பீஹாரில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பேசிய நிதிஷ் குமார், 'அடிக்கடி கூட்டணி மாறுவதாக என் மீது புகார் கூறுகின்றனர். ஆனால், எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. பா.ஜ., கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்.
'கடந்த 2022ல், பா.ஜ., கூட்டணியில் இருந்து நான் வெளியேறியதற்கு, இதோ மேடையில் அமர்ந்துள்ள, எங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் தான் காரணம்.
'அவரது பேச்சை கேட்டுத் தான் கூட்டணியை முறித்தோம். இப்போது அவரும் திருந்திவிட்டார்; நானும் திருந்திவிட்டேன். இனி கடைசி வரை, பா.ஜ., கூட்டணி தான்...' என்றார்.
இதைக் கேட்டு, மேடையில் இருந்த ராஜிவ் ரஞ்சன் தர்மசங்கடத்தில் நெளிந்தார். 'அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, நேரம் பார்த்து பழி வாங்கிட்டாரே நிதிஷ் குமார்...' என, ராஜிவ் ரஞ்சன் புலம்புகிறார்.