PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

துாத்துக்குடி மாநகர பகுதியில், மழை நேரத்தில் தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கு, கவனிக்கப்படாமல் உள்ள காலி மனைகளும் ஒரு காரணம். இதனால், 400 காலி மனை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
'வரும் காலங்களில் மழை தண்ணீர் தேங்கினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது மாநகராட்சி நிர்வாகமே அந்த இடத்தை நிரப்பி, அதற்கான செலவை வசூலிக்கும்' என்ற நோட்டீசால், அதிர்ந்து போன உரிமையாளர்களில் சிலர், உடனே காலி மனைகளை சீரமைத்தனர்; சிலர் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
காலி மனைகளை சீரமைத்த உரிமையாளர்களை, திடீரென நேரில் அழைத்த மேயர் ஜெகன் பெரியசாமி, விழா எடுத்து, சால்வை அணிவித்து கவுரவித்தார்.
விழாவுக்கு வந்திருந்த முதியவர் ஒருவர், 'இது புதுவிதமான அணுகுமுறையாக இருக்கே... காலி மனைகளை சரியா பராமரிக்காதவங்களுக்கு, சரியான நெத்தியடி...' என பாராட்டினார்.