PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறியதாக, மத்திய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் பேசுகையில், 'புயலால் பாதிக்கப்படும் போது, 1,000, 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது, மக்களின் பிரச்னைக்கு தீர்வாகாது. தமிழக அரசு நிரந்தர தீர்வு காண, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்' என்றார்.
அப்போது, வேங்கைவயல் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, 'வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு பேச எதுவும் இல்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'திராவிட மாடல் அரசுக்கு புதுசு புதுசா பிரச்னை வருதே... அதான், வேங்கைவயல் பிரச்னையை பழசுன்னு சொல்றாரு...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

