PUBLISHED ON : ஜன 22, 2024 12:00 AM

சென்னை, ஆவடியில் நடந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்றார்.
அப்போது, லோக்சபா தேர்தல் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமை, கூட்டணி கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கும்; வெற்றி வாய்ப்பிற்கு ஏற்ப, தொகுதி பங்கீடு நடக்கும். தி.மு.க., கூட்டணி, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான கூட்டணியாக இருக்கும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஆமா... தமிழகத்துல, தி.மு.க., கொடுக்கற, 'சீட்'டை வாங்கிட்டு போய் தான் ஆகணும்... இப்படியே எல்லா மாநிலத்துலயும் காங்கிரஸ் இருந்துட்டா, எல்லா இடத்துலயும் கூட்டணி சிறக்கும்... ஆனால், ராகுல் பிரதமர் ஆகுறது மட்டும் கனவுல கூட நடக்காது...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.