PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சி, தைரியமாக ஆட்சியில் பங்கு கேட்கிறது. அதுபோல உங்கள் கூட்டணியில், நீங்களும் அ.தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?' என்று ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு நயினார் நாகேந்திரன், 'காங்., செய்வதை நாங்களும் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் கேட்கின்றனர். நாங்கள் தே.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் இலக்கு, தி.மு.க., ஆட்சியை அகற்றுவதுதான்' என்றபடியே, மேலும் கேள்விகள் எழுவதை தவிர்க்க நினைத்து, பேட்டியை முடித்து கொண்டு கிளம்பினார்.
இதைப் பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் பங்கு கேட்பீங்களா என்ற கேள்விக்கே பயப்படுறவர், எப்படி ஆட்சியில பங்கு கேட்பார்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

