PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:26 AM

கோவையில், காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்த, 'நீட்' எதிர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, அதன் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வந்திருந்தார்.
அவருக்கு சால்வை அணிவிக்க, மேடையில் தொண்டர்கள் சூழ்ந்து இருந்ததால், ஒரே சத்தமாக இருந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், 'இப்படி சத்தம் போட்டீங்கன்னா, தலைவர் பேசாம எழுந்து போயிருவார்; கொஞ்சம் அமைதியாக இருங்கள்' என்று கடிந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து, மண்டபம் முன்பிருந்த காரில் ஏற மாணிக்கம் தாகூர் வந்தபோது, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்., கோஷ்டியினர், 'சில நிர்வாகிகளை நீக்க வேண்டும்' என்ற கோஷத்துடன், அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், மாணிக்கம் தாகூர் கோபத்துடன் காரில் ஏறி புறப்பட்டார்.
அங்கிருந்த வயதான காங்., தொண்டர் ஒருவர், 'கோஷ்டிப்பூசல் இருக்கிற வரை நம்ம கட்சி உருப்படாது' என, புலம்பியபடியே நடையை கட்டினார்.
