PUBLISHED ON : ஜூலை 23, 2026 01:39 AM

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஆறாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம் பேசுகையில், 'அம்பேத்கர் நகர் குளத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீரமைப்பு பணிகள் என்னாச்சு?' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கவி.கணேசன், 'டெண்டர் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டால், எப்படி பணிகள் மேற்கொள்ள முடியும்? நடப்பது, உங்கள் கூட்டணியான த.வெ.க., அரசு தானே... நீங்களே கேட்டு சொல்லுங்கள்' என, கிண்டலாக கூறினார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'என்ன தான் கூட்டணி மாறினாலும், காங்கிரஸ் கவுன்சிலரை இப்படி போட்டு வாங்கணுமா?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
