
கலெக்டரை மிரட்டிய பெண்!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் கிராமத்தில், சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிவசண்முகராஜா கலந்து கொண்டார். கூட்டம் துவங்கியதும், அஞ்சலி என்ற பெண் எழுந்து, 'எங்கள் பகுதியில் கரன்ட் இருக்கு... பல்பு இருக்கு... ஆனா, பல்பு எரிவதில்லை. குடிநீர் குழாய் புதைக்கப்பட்டிருக்கு... குடிநீர் இணைப்பு கேட்டா, மார்க் போடுறாங்க... அளந்து பார்க்கறாங்க... அப்பறம், 'பைப் இல்லைங்கறாங்க... பைப்பு இருந்தா தண்ணீர் வரலை... இது மாதிரி, எட்டு வருஷமா கஷ்டப்படறோம்...' என, கிராமத்துப் பாணியில் குறைகளை அடுக்கினார்.
அவரது பேச்சைக் கேட்டு, கலெக்டர் உட்பட அனைவரும் சிரித்தனர். அதைக் கண்ட அந்தப் பெண், 'சிரிக்கறதுக்காக குறை சொல்லலை... உண்மையைச் சொல்கிறேன்... சிரிக்காதீங்க...' என, சீரியசாக கலெக்டரையே மிரட்டினார். உடனே, அனைவரும் சிரிப்பை கைவிட்டு சீரியசாகி விட்டனர். உடனே, கலெக்டர், 'நடவடிக்கை எடுக்கச் சொல்றேன்...' என, உறுதியளித்து நிலைமையை சமாளித்தார்.இதைக் கண்ட ஊழியர் ஒருவர், 'அந்தம்மா கலெக்டரையே மிரட்டறதைப் பார்த்தியா...' என, 'கமென்ட்' அடித்தார்.'நம்ம ரோடு தான் தெரியுமே...!'
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்பழையனூரில் நடந்த மருத்துவ முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலரை செல்லுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 'ஏழு மாத கர்ப்பிணியான என்னால் குண்டும் குழியுமான ரோட்டில் செல்ல முடியாது... குழந்தைக்கு பிரச்னை ஆகிவிடும்' என, கல்வி அலுவலர் மறுத்தார். 'மருத்துவ முகாமிற்கு கட்டாயம் போய் வர வேண்டும்' என, கட்டாயப்படுத்தியதால் அவரும் சென்று வந்தார்.
மறுநாள், அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் உள்ள குழந்தை இறந்து பிறந்தது.
இதனால், அவர் மருத்துவ விடுமுறையில் சென்று விட்டார்.இந்தப் பிரச்னை பெரிய புகாராக போய்விடுமோ என்ற நடுக்கத்தில், மாவட்ட கல்வி அலுவலர் இருந்து வருகிறார்.
இதைக் கண்ட ஊழியர் ஒருவர், 'நம்ம ரோட்டைப் பத்தி தான் தெரியுமே... கர்ப்பிணிப் பெண்ணை கஷ்டமான பணிக்கு அனுப்புவானேன்... இப்ப, இப்படி கஷ்டப்படுவானேன்...' என, 'கமென்ட்' அடித்தார்.
'எஸ்.பி., வர்றார்...!'சென்னை, ரயில்வே எஸ்.பி., பாஸ்கரன், சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட, காவலர்கள் புடைசூழ, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அதற்கு முன், அரக்கோணம் செல்லவிருந்த புறநகர் மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில், அவருடன் வந்த போலீசார் சிலர் ஏறி, முதல் வகுப்பு பெட்டியின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தவர்களிடம், 'எஸ்.பி., வர்றார்; அடுத்த பகுதிக்குச் செல்
லுங்கள்...' என்று விரட்டினர்.
எஸ்.பி., வந்ததும், அவர் அமர்ந்திருந்த பகுதியில் யாரையும் விடாமல், போலீசார் அரண் போல் சுற்றி நின்று கொண்டனர். ரயில் நிலையங்களில் ரயில் நின்ற போதெல்லாம், முதல் வகுப்பு பெட்டியில் ஏற முயன்ற பயணிகளை, போலீசார் பெட்டியின் அடுத்த பகுதிக்கு விரட்டினர். இதனால், இருக்கையில் அமரவும், நிற்கவும் இடமில்லாமல் வயதானவர்கள், பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.இதைப் பார்த்த பயணி ஒருவர், 'பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே, பயணிகளுக்கு இப்படி இடையூறு பண்றாங்களே...' என்று புலம்பியபடி இறங்கிச் சென்றார்.
மேடை ஏறாத அமைச்சர்...!தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பட்ஜெட் விளக்க பொது கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
செந்தமிழன், எம்.பி., மைத்ரேயன் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால், எட்டு மணி ஆகியும் அமைச்சர் வராததால், பலர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், திடீரென அங்கு வந்த அமைச்சர், மேடைக்குச் சென்று அமராமல் கீழேயே அமர்ந்தார். மேடை ஏறாமல், பொன்னாடை மரியாதையை பெற்று கொண்டு, கூட்டத்தை விட்டு கிளம்பினார். இதனால், கட்சியினரும் பொதுமக்களும் காரணம் தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது அங்கிருந்த விஷயமறிந்த தொண்டர் ஒருவர், 'கோஷ்டிப் பூசல் கடுமையா இருக்கு போலிருக்கே...' என, 'கமென்ட்' அடித்ததும் சுற்றியிருந்
தவர்கள் சிரித்தனர்.

