PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

திருப்பூரில், சில மாதங்களுக்கு முன் நாட்டு வெடி தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பலியானோர் குடும்பங்களுக்குநிவாரணம் வழங்கக் கோரி, அ.தி.மு.க., சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.
பின், அக்கட்சியின் மாவட்டச் செயலரும், பொள்ளாச்சிதொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் கூறுகையில்,'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், உடனே 10 லட்சம்ரூபாய் நிவாரணம் தருகின்றனர். இங்கு, முறைகேடாகநாட்டு வெடி தயாரித்துள்ளனர். அங்கு பணிபுரிந்தவர்கள், பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 பைசா கூட நிவாரணம் தரவில்லை. நிவாரணம் வழங்காவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கள்ளச்சாராய பலிக்கு அரசு 10 லட்சம் ரூபாய் தந்தது, தவறான முன் உதாரணம் ஆகிடுச்சே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.