PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

கோவை, கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடந்தது. இதை முன்னிட்டு, அரசு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் டென்ட் அமைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், அரசு பணியில் உள்ள பல பெண் அதிகாரிகள் பங்கேற்றனர். பெரிய ஸ்பீக்கர்களில் பாட்டு ஒலிக்க, பெண் குழந்தைகள் நடனம் ஆடினர். திடீரென ஸ்பீக்கரில், 'வாடி பொட்ட புள்ள வெளியே...' என்ற வடிவேலு பட பாடல் ஒலித்தது. அடுத்ததாக, 'சக்கரவள்ளி கிழங்கே நீ சமஞ்சது எப்படி...' என்ற பாடல் ஒலிக்க பெண்கள் அதிர்ந்தனர்.
அங்கு கூடியிருந்தோர் பாடல் ஒலிபரப்பு செய்தவரை சத்தம் போட்டு, ஸ்பீக்கரை ஆப் செய்யுமாறு கூறினர். பாடலை நிறுத்திய பின்னரே அங்கு அமைதி திரும்பியது.
இதை பார்த்த வயதான பெண்மணிகள் இருவர், 'பெண்மையை போற்றும் நிகழ்ச்சியில் இப்படியா பாட்டு போடுவாங்க...' என, தலையில் அடித்தபடி புறப்பட்டனர்.

