PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம்,- ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக அஸ்வின்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மாநில செயலர் சுமதி வெங்கடேசன் முன்னிலையில், பா.ஜ.,வின் ஒரு தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின், பேட்டியளித்த சுமதி வெங்கடேசன், 'மாநில தலைமை, அஸ்வின்குமாரை மாவட்ட தலைவராக தேர்வு செய்துள்ளது. அதில், சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்; மன வருத்தம் இருக்கலாம். ஆனால், தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். இது போன்ற பிரச்னைகள் எல்லா கட்சிகளிலும் இருப்பது தான். இதை பெரிதுபடுத்த தேவையில்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'உண்மை தான்... இவங்களா இருக்கப் போய் வாக்குவாதத்தோடு முடிஞ்சது... இதே காங்கிரஸ் கட்சியா இருந்தால், வேட்டியை உருவி, நாற்காலிகள் பறந்திருக்கும்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

