PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

திருச்சி மாவட்டம், முசிறியில், உரிமை மீட்பு போராட்டம் என்ற தலைப்பில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் துணை பொதுச்செயலர் பொன்முடி பேசுகையில், 'பெட்ரோல் விலை லிட்டர் 350 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 750 ரூபாய்க்கு விற்கிறது' என்றார்.
இதைக் கேட்ட அமைச்சர் நேரு, அவர் தவறாக பேசுவதை உணர்த்தும் விதமாக, பொன்முடிக்கு சைகை காட்டினார். அதை புரிந்து கொள்ளாமல், மீண்டும் பெட்ரோல் விலை பற்றி பொன்முடி பேசியதால், நேரு அங்கிருந்த பேப்பரில் துண்டு சீட்டு எழுதி கொடுத்தார்.
அந்த சீட்டை வாங்கி பார்த்த பொன்முடி, அதன் பிறகே, பெட்ரோல் விலையை சரியாக குறிப்பிட்டு பேசினார்.
பார்வையாளர் ஒருவர், 'பெட்ரோல் விலை அதிகம் தான்... ஆனா, இவர் சொல்ற மாதிரி விலை டபுளானது தமிழகத்தின் டாஸ்மாக் சரக்குகள் மட்டும் தானே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

