PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக சந்திரகுமார் கடந்த பிப்ரவரியில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ., அலுவலகம், சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ளது. 'இந்த அலுவலகம் ராசி இல்லாதது' என்ற சென்டிமென்டால், அகில்மேடு வீதியில் தனியார் கட்டடத்தில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகத்தை சந்திரகுமார் சமீபத்தில் திறந்தார்.
உள்ளூர் அமைச்சர் முத்துசாமி உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பெயர்களை அழைப்பிதழில் போட்டிருந்த சந்திரகுமார், காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினர் பெயர்களை முற்றிலும் தவிர்த்து விட்டார்; இதனால், கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
காங்., நிர்வாகி ஒருவர், 'நம்ம கட்சியிடம் இருந்த இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தது தப்புப்பா... சந்திரகுமார் இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார் பார்த்தீங்களா...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

