PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM

திருப்பூரில் நடந்த புத்தக திருவிழாவில், 'இலக்கியங்கள், காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் கருத்து வளமா, கற்பனை திறனா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
இதில், நடுவராக ராமலிங்கம் பேசும் போது, '1971ல், எழுத்தாளர் கி.வா.ஜகந்நாதன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. நானும் பேச்சாளராக பங்கேற்றேன். எங்கள் அணி தலைவராக குமரி அனந்தனை பேச அழைத்த போது, அவரின் சட்டை பொத்தான் அறுந்து விழுந்து விட்டது.
'அங்கு இருந்தவர்களிடம், யாராவது, 'பின்' கொடுங்கள் எனக் கேட்டார். இதை கவனித்த கி.வா.ஜ., 'தமிழில் புலமை பெற்ற குமரி அனந்தன், 'பின்' வாங்கலாமா?' எனக் கேட்க, 'கி.வா.ஜ., 'ஊக்கு'வித்தால் நான் ஏன், 'பின்' வாங்குகிறேன் என்றார் குமரி அனந்தன்.
'தமிழை அழகுடன் கையாண்ட காலம் அது. நல்ல வார்த்தைகளை, நயம்பட பேச வேண்டும். கற்றுத்தர வேண்டும்' என்றார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'உண்மை தான்... ஆனா, இந்த புத்தக திருவிழாவில் கூட மொபைல் போன்கள் தானே பேசுது' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.