PUBLISHED ON : ஜன 29, 2024 12:00 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர் அன்பரசனின் சொந்த ஊரான குன்றத்துாரில் தான் நடத்தப்படுகின்றன. இது, சென்னையை ஒட்டியுள்ளது. சென்னையில் வசிக்கும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காலை நேர நிகழ்ச்சியில் பங்கேற்க வசதியாக இருக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.
இதனால், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்ற அதிகாரிகள், அலுவலர்கள், காஞ்சிபுரத்தில் இருந்து குன்றத்துாருக்கு படையெடுக்கின்றனர். இது சம்பந்தமான சர்ச்சை எழுந்த நிலையில், சமீபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியை, உத்தரமேரூர் தொகுதியில் நடத்தினர்.
இதில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், 'மாவட்ட தலைநகர் அல்லது பக்கத்து தொகுதியில் அரசு நிகழ்ச்சியை நடத்தினால் நமக்கு அலைச்சல் குறைஞ்சிடுமே...' என, முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'பெயருக்கு ஒரு நிகழ்ச்சியை இங்க நடத்தி இருக்காங்க... எல்லா நிகழ்ச்சியையும் அமைச்சர் தன் சொந்த ஊரில் தான் நடத்துவார்...' என, 'கமென்ட்' அடித்து நடந்தார்.