PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM

இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பேரவை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, ஐ.என்.டி.யு.சி., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில், பேரவை கவுரவ தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், 90,000 பேரில், 26,000 பேர், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு ஓய்வூதியமும், அகவிலைப்படியும் உயர்த்தி வழங்க வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வலியுறுத்தினேன்.
'ஆனால், மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. அதனால், ஐ.என்.டி.யு.சி., தலைமையில் இயங்கும் அனைத்து சங்கங்களிடமும் பேசி, போராட்டத்தை அறிவிப்போம்' என்றார்.
தொழிலாளர் ஒருவர், 'நாம ஆளுங்கட்சி கூட்டணி யில் இருக்கோமே... லோக்சபா தேர்தல் நேரத்துல, அரசுக்கு எதிரா போராட்டம் நடத்துனா நல்லாவா இருக்கும்...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'போராட்டமே தேர்தலுக்காக தானே... அப்ப தான், சீட் பெற, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்...' என, உண்மையை போட்டு உடைத்தார்.