PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

கோவை, பேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த, பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் பங்கேற்றார்.
காப்பீடு அட்டை வழங்கிய எம்.பி., கூட்டத்தினரை பார்த்து, 'என்னை யார் என்று தெரிகிறதா?' என, கேள்வி எழுப்பினார்.
உடனே ஒரு மூதாட்டி, 'இந்த காப்பீடு திட்ட கம்பெனியின் மேனேஜர் தானே...' என்றதும் எம்.பி., உட்பட அங்கிருந்த அனைவருமே சிரித்தனர். பிறகு அவரே, 'அட, நான் தானம்மா உங்க பொள்ளாச்சி தொகுதி எம்.பி., சண்முகசுந்தரம்...' என்றார்.
அவர் சொன்னதை கேட்டு பெண்கள் பலரும், 'இவரு தான் நம்ம எம்.பி.,யா...' என, ஒருவருக்கொருவர் வியப்புடன் கேட்டுக் கொண்டனர்.
அங்கிருந்த ஒருவர், 'தொகுதி பக்கம் அடிக்கடி தலையை காட்டினால் தானே... இவ்வளவு கூட்டத்துல, ஒரே கேள்வியில் இப்படி மொக்கை வாங்கிட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

