PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட, 2,220 பேருக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை, தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் கல்பனா வழங்கினார்.
ஆண்களுக்கு காக்கி பேன்ட், சர்ட், தலைப்பாகை, காலணி, 12 சோப்புகள்; பெண்களுக்கு தலா ஒரு ஜோடி சேலை, ஜாக்கெட், தலைப்பாகை, காலணி, 12 சோப்புகள் வழங்கப்பட்டன.
தவிர, ஒளிரும் ஜாக்கெட், மழை கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கிய மேயர், 'துாய்மை பணியின் போது கட்டாயம் இந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
தொழிலாளி ஒருவர், 'நம்ம உடலுக்கு பொருந்தாத அளவுல உபகரணங்களை கொடுத்துட்டு, கட்டாயம் பயன்படுத்த சொல்றாங்களே...' என, முணுமுணுக்க, மற்றொரு தொழிலாளி, 'இதை எல்லாம் தந்ததே பெரிய விஷயம்... சும்மா இருங்க...' என, அவரை கையை பிடித்து அழைத்துச் சென்றார்.