PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த மாணிக்க நத்தம் கிராமத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மாலையில் போராட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன்பின், தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார், தி.மு.க., கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்; காலி இருக்கையில் அமர்ந்து, அருகில் இருந்தவரிடம் பச்சை துண்டு வாங்கி அணிந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தானும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதை பார்த்த ஒருவர், 'இதுக்கு முன்னாடி எம்.பி.,யா இருந்த இவரது கட்சியின் சின்ராஜ் மாதிரியே இவரும் அலப்பறை பண்றாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

