PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்ஆய்வு செய்தனர். அப்போது, கல்லுாரி முதல்வர் முருகேசன் காதில் செல்வப்பெருந்தகை ஏதோ கிசுகிசுக்க, அவர் தலையசைத்து, 'வாங்க சார்' என, செல்வப்பெருந்தகையை, 'ஸ்கேனிங்' வார்டுக்கு அழைத்துச் சென்றார். உடன் யாரும் வர வேண்டாம் என, கூறிவிட்டனர்.
அடுத்த, 10 நிமிடங்களுக்கு பின், சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வந்த செல்வப்பெருந்தகை, குழுவினருடன் அங்கிருந்து புறப்பட்டார். மருத்துவக் கல்லுாரி தரப்பில் விசாரித்த போது, 'செல்வப் பெருந்தகை தன் வயிற்றை ஸ்கேன் செய்ய வேண்டும்' என, கேட்டுக்கொண்டதால், ஸ்கேன் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
மூத்த நிருபர் ஒருவர், 'ஆய்வுக்கு வந்த இடத்துல, உடல் பரிசோதனையையும் முடிச்சுட்டாரே... இது தான் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதோ...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.