PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கவரப்பாளையத்தில் தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மத்திய பட்ஜெட்டை கண்டித்து புள்ளி விபரங்களுடன் பேசினார். தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைப்பதாக ஆவேசமாக பேசினார்.
அப்போது திடீரென, ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் வரும், 'மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே...' என்ற பாடல் அங்கிருந்த ஸ்பீக்கரில் ஒலிபரப்பானது. இதை கேட்டு முதல்வர் உட்பட கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்; ஆயினும் முதல்வர் அதை காட்டிக் கொள்ளாமல், தன் பேச்சை தொடர்ந்தார். சில நிமிடங்களில் பாடல் நிறுத்தப்பட்டது.
கூட்டம் முடிந்து கட்சியினர் கிளம்பியபோது, ஒரு தொண்டர், 'நல்லவேளை... ரஜினி பாட்டை போட்டாங்க... விஜய் பாட்டை போட்டிருந்தா, மைக் செட்காரர் ஒருவழியாகியிருப்பார்...' என கூற, சக தொண்டர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

