PUBLISHED ON : ஜன 15, 2026 02:07 AM

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.
மதுரவாயல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலக் குழு தலைவர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது. அது முடிந்ததும், சில மாணவர்கள் திடீரென நடிகர் விஜய் கட்சியான, டி.வி.கே., என கோஷமிட்டபடியே, பள்ளி வளாகத்திற்குள் ஓடி மறைந்தனர். இதை பார்த்து, எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'இந்த பசங்களுக்கு என்ன தான் சைக்கிள்கள் கொடுத்தாலும், ஓட்டு போடும் வயசு வந்ததும், விஜய் கட்சிக்கு தான் போடுவாங்கப்பா...' என சலித்துக்கொள்ள, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

