PUBLISHED ON : ஜூலை 25, 2025 12:00 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார். முன்னதாக, அவரை வரவேற்கும் விதமாக, இலுப்பூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களில் விளம்பரங்கள் செய்யும் நிகழ்ச்சியை, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கிருந்த பெண்களுக்கு டீ வாங்கி கொடுத்தார். அவர்களில் ஒரு பெண்மணி, 'அண்ணா, எனக்கு நீங்களே டீ போட்டு குடுங்க' என்று விஜயபாஸ்கரிடம் உரிமையாக கேட்டார். இதையடுத்து விஜயபாஸ்கர், கடைக்குள் சென்று மாஸ்டரிடம் டம்ளரை வாங்கி, தானே டீ போட்டு தந்தார். 'பழனிசாமி பிரசார நிகழ்ச்சியில் பெண்கள் எல்லாரும் தவறாம கலந்துக்கணும்' என்றும் அழைப்பு விடுத்தார்.
இதைப் பார்த்த ஒருவர், 'பழனிசாமி பிரசாரத்துக்கு வர்றவங்களுக்கும் வெறும் டீயை குடுத்து அனுப்பிடப் போறாங்க...' என முணுமுணுக்க, மற்றவர்கள், 'அதெல்லாம் வெயிட்டா கவனிப்பாங்கப்பா...' என்றபடியே நடையை கட்டினர்.