PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM

பருவ மழைக் காலங்களில் சென்னை, வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை, தொகுதியின் த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான குமார் சமீபத்தில் ஆய்வு செய்தார்.
உடனிருந்த மாநகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள், வெள்ள பாதிப்பு தடுப்புகள் குறித்து, ஆளாளுக்கு ஒரு ஆலோசனை கூறினர்.
இதனால் குழப்பம் அடைந்த அமைச்சர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதாப் ரசூலிடம், 'இவர்கள் கூறுவது எதுவும் புரியவில்லை; நீங்களே அவர்களிடம் பேசி, இறுதி முடிவு எடுத்து சொல்லுங்கள்; தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்' என கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.
இதை பார்த்த ஒரு முதியவர், 'விட்டா போதும்னு அமைச்சர் பறந்துட்டாரே... அடுத்து, அதிகாரிகளும் நடையைக் கட்டிடுவாங்க... நாம வழக்கம் போல, மழைக்காலத்துல பிெரட், பால், மெழுகுவர்த்திக்கு அலைய வேண்டியது தான்' என புலம்ப, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
