PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியில், முன்பு தனி அலுவலராக பணியாற்றியவர் பூங்கொடி. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்து, ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பூங்கொடி, பதவி உயர்வில்அவிநாசி துணை பி.டி.ஓ.,வாக சென்று விட்டார்.
சமீபத்தில் இந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டத்துக்கு, ஒன்றிய பார்வையாளராக பூங்கொடி நியமிக்கப்பட்டார். கூட்டம் நடத்த ஊராட்சி தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தும், பூங்கொடி வரவில்லை. இதனால், பொதுமக்களில் பலர் கிளம்பி விட்டனர்.
ஒருவழியாக, மூன்று மணி நேரம் கழித்து வந்த பூங்கொடி, 'தொலைதுாரத்தில் இருந்து வருவதால் தாமதமாகி விட்டது' என, சமாளித்தார். ஆயினும், 'கோரம் இல்லை' என கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞர் ஒருவர், 'இந்தம்மா இங்க இருந்தப்ப நடந்த முறைகேடுகள் பத்தி, யாராவது பிரச்னை கிளப்புவாங்கன்னு பயந்தே, லேட்டா வந்து ஆட்டையை கலைச்சுட்டாங்க... புத்திசாலி அதிகாரிதான்...' என, புலம்பியபடியே கிளம்பினார்.