PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு அறநிலையத் துறை இரு பஸ்களை இயக்குகிறது. சமீபத்தில் நடந்த திருவிழாவுக்கு, போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்தனர்.
ஆனால், 'போக்குவரத்து கழக பஸ்கள் வேண்டாம்; நாங்களே ஏற்பாடு செய்து விட்டோம்' என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதன்படி, தனியாருக்கு கான்ட்ராக்ட் விட்டு, கோவில் நிர்வாகம் பஸ்களை இயக்கியது. அடிவாரத்தில் இருந்து கோவில் செல்லும் பக்தர்களிடம் டிக்கெட் வழங்கப்பட்டு, கோவிலை அடைந்ததும் அவை திரும்ப பெறப்பட்டன. இதே டிக்கெட்டை கோவிலில் இருந்து அடிவாரம் செல்லும் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கினர்.
பக்தர்கள் சிலர், 'அரசு பஸ்சில் எப்ப, எங்க ஓட்டை விழும்னு தெரியலையே... அதான் தனியாரை தேடி போயிட்டாங்களோ...' என, முணுமுணுத்தபடி சென்றனர்.