PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில், 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பானுமதி, ‘திருவொற்றியூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் செயல்படவில்லை; கூடுதல் இயந்திரங்கள் தேவை’ என குறிப்பிட்டார்.
மண்டல குழு தலைவர் தனியரசு, ‘தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வைக்க வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என, பெண் அதிகாரி ஒருவருக்கு, ‘மைக்’கில் அறிவுறுத்தினார்.
பெண் அதிகாரி, மொபைல் போனை பார்த்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. மண்டல குழு தலைவர் மீண்டும் அழைக்க, அவர் பதறி எழுந்து, ‘சி.எஸ்.ஆர்., நிதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘எந்நேரமும் மொபைல் போனையே பார்த்துட்டு இருந்தா, மக்கள் பணிகளை எப்ப தான் கவனிப்பாங்களோ?’ என முணுமுணுத்தபடியே, அங்கிருந்து கிளம்பினார்.
