PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சியின், மணலி மண்டல அலுவலகத்தில், தி.மு.க., மண்டல குழு தலைவர், ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக, பொன்னேரி காங்கிரஸ், எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், திருவொற்றியூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், ஊர் நலச்சங்கத்தினர், தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் எடுத்து கூறினர்.
அப்போது, 21வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர் பேசுகையில், 'எங்கள் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள், 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன...' என்றார்; அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அந்த, அ.தி.மு.க., கவுன்சிலர் சொல்றதை பாத்தா, இந்த முறையும், மணலியை வெள்ளத்தில் மிதக்க விட்டுருவாங்க போலிருக்கே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.