PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

இந்தியர்களை கை விலங்கிட்டு, நாடு கடத்திய அமெரிக்க நாட்டை கண்டித்து, இந்திய கம்யூ., கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தலைமை வகித்தார். அதில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசுகையில், 'இந்தியர்களை அவமானப்படுத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி, அமெரிக்காவை கண்டிக்காமல், அங்கு சென்று விருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்திய நாட்டின் குடிமகனுக்கு எங்கு துயரம் நேர்ந்தாலும், பிரதமர் கொதித்தெழ வேண்டாமா... ஆனால், மோடி மவுனமாக இருந்திருக்கிறார்' என, ஆவேசமாக பேசினார்.
வேடிக்கை பார்த்த முதியவர் ஒருவர், 'சட்ட விரோதமா அங்கு போனவங்களை, கல்யாண வீட்டுல, தாம்பூல பை தந்து வழியனுப்புற மாதிரி அனுப்பி வச்சிருக்கணும்னு சொல்ல வர்றாரோ...?' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

