PUBLISHED ON : டிச 26, 2025 03:45 AM

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசினார்.
அவர் பேசும்போது, 'சட்டசபையில், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனும், நானும் கேள்வி கேட்டால், எங்களை பேசவே விட மாட்டார்கள். தி.மு.க., கருணாநிதியுடன் அரசியல் செய்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அவரது பேரன் உதயநிதி காலில் விழுந்து கிடப்பது தான், சுயமரியாதை பேசும் அந்த கட்சியின் நிலை.
'வாரிசு அரசியலுக்காக, தமிழகத்தின் எதிர்காலத்தை, தி.மு.க., அரசு குழி தோண்டி புதைத்து வருகிறது. தி.மு.க.,வில் முதல்வர் நாற்காலி, கோபாலபுரத்து குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம்...' என, ஆவேசமாக பேசினார்.
மேடையின் கீழ் இருந்த தொண்டர் ஒருவர், 'சட்டசபையில் பேச முடியாததை எல்லாம் இங்க வந்து கொட்டிட்டாங்களே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

