PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

மதுரை, தெப்பக்குளம் பகுதியில், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான, செல்லுார் ராஜு தலைமையில் நடந்தது.
செல்லுார் ராஜு பேசும்போது, 'மதுரை மாநகரில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., உறுதியாக வெல்லும். 'தி.மு.க.,வை ஒழிக்கும் வரை ஓயாமல் பாடுபட வேண்டும்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
'அதற்கு பெருவாரியான இளைஞர்கள் களப்பணிக்கு வர வேண்டும். அவர்களுக்கு, மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்க வேண்டும். பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்.
'அனைவருக்கும் பிரியாணி ரெடியாக உள்ளது... சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். சாப்பிடாமல் சென்றால், ரத்தம் கக்கி சாவீங்க...' என, சிரித்தபடியே கூறினார்.
இதை கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'இன்னைக்கு விரதம், அசைவம் சாப்பிட வேண்டாம்னு பார்த்தேன்... அண்ணன்  பயமுறுத்துறதால, பிரியாணியை சாப்பிட்டு தான் ஆகணும்...' எனக் கூற, சக நிர்வாகிகள் சிரித்தபடியே உணவு அரங்கை நோக்கி நடந்தனர்.

