PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமிபேச்சு: அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல்
கிடையாது.
எம்.ஜி.ஆர்., யாரையும் அடையாளம் காட்டவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு
பின், ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவுடன், பதவிக்கு வந்துள்ளார்,
பழனிசாமி. இதில் முனுசாமி, கந்தசாமி போன்றவர்கள் பதவிக்கு
வரலாம். நாம் ஒற்றுமையுடன், உறுதியாக இருந்தால், 2026 தேர்தலில்
எல்லா கட்சியும், அ.தி.மு.க.,வை தேடி வரும்.
தமிழக காங்., பொதுச்செயலர்ரமேஷ்குமார் அறிக்கை: லோக்சபா செயலகம் சிறப்பு காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இந்த மாதாந்திர நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளதாக எம்.பி.,க்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் சபாநாயகர்ஓம் பிர்லா. ஆனால், அந்த நாள்காட்டியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை செதுக்கிய அம்பேத்கரின் புகைப்படமே இல்லை.
அது சரி... தமிழகத்தில் காங்கிரசின் அடையாளமானகாமராஜர் போட்டோவை இப்பல்லாம் கட்சி போஸ்டர்களில் பார்க்க முடியலையே... அது ஏன்?
ஹிந்து தமிழர் கட்சித் தலைவர்ராம.ரவிகுமார் அறிக்கை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தனக்கு தானே சாட்டையால் அடித்துக்கொண்டு அறவழிப் போராட்டத்தை நடத்தி, மக்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏளனம்செய்துள்ளனர். இன்று அண்ணாமலையை விமர்சித்து பேசக்கூடிய அத்தனை தலைவர்களும், ராகுல் பாரத ஒற்றுமை யாத்திரையின் போது, சாட்டையால் அடித்துக்கொண்டதை பாராட்டியது ஏன்?
அப்ப, ராகுலை பார்த்து தான் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை நடத்தினாரா என்ன?
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: இணக்க வரி, கட்டட வரிக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. வரி விதிப்பை எதிர்த்து போராட்டங்களை நடத்தி உள்ளோம். மார்ச் மாதத்துக்குள் வரி விதிப்பை கைவிடாவிட்டால், வணிகர்களை திரட்டி, டில்லியில் போராட்டம் நடத்துவோம்.
'டில்லியில் போராட்டம் நடத்தினால் தான், மத்திய அரசின் காதுல விழும்'னு இவரிடம் யார் சொன்னது?

